View My Stats

Tuesday, May 5, 2026

விஜய் வெற்றி !

 விஜய் வெற்றி !


தமிழக மக்கள் தம் தீர்ப்பை தெளிவாக வழங்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சி மீதான வெறுப்பும் இரு திராவிடக் கட்சிகளினதும் மாறி மாறி வந்த ஆட்சிகளின் அலுப்பும் சேர்த்து மாற்று ஒன்றைத் தேடிய வேளையில் நம்பிக்கை தரக்கூடிய புதிய தெரிவாக விஜய் வந்தார்.
தனியே திரைக் கவர்ச்சி என்று மட்டுமன்றி பொருத்தமான மாற்றுத் தெரிவாக அமைவார் என்று மக்கள் மத்தியில் ஒரு மனவுறுதியைக் கட்டியெழுப்பிய விஜய், விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னைக் கட்டியெழுப்பிய ஒவ்வொரு அடித்தளமும் சரியான strategyயுடன் செய்யப்பட்டவை.
எம்மிற் பலருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்த அவதானிகளுக்கே தெரியாமல் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த மிகப்பெரும் அரசியல் பூகம்பத்தை விஜய் தன் ஆழமான நகர்வுகளால் - ஆனால் உறுதியான உரைகள் (இவை கூட கேலி செய்யப்பட்டாலும் தனது இலக்குக்குரிய மக்கள் எவரோ அவர்களை சரியாக அவற்றை அடையச் செய்தது அவரது பலம்) + நடவடிக்கைகளோடு தானாக இந்த வெற்றியைக் கனிய வைத்த ஆட்சியாளரின் தவறுகளும் அடாவடி விமர்சனங்களும் கூடவே மக்களின் அனுதாபமும் சேர்ந்துகொண்டது.
ஆனால் நான் பார்த்து ஆச்சரியப்பட்டதும் ரசித்ததும் கடைசி நான்கைந்து ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு மேடைகளிலிருந்து தேர்தல் மேடைகள் வரை மெருகேறி வந்த அவரது உரைகளும் அதற்கான உழைப்பும்.
(social media, youth attraction, சினிமா பாணியிலான power packed பாடல்கள் எல்லாம் கோடிக்கணக்கான பலம் கொண்ட மற்றவர்களால் கூட போட்டி போட முடியாதவொன்றாக அமைந்துபோனது)
அதில் தெரிந்த உறுதியும் கூட.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பகிரங்க சவால் விடுவது விஜய் போன்ற ஒருவருக்கு இலேசானதல்ல.சினிமாத்தனமும் இயல்பை மீறிய ஹீரோயிசமும் இருந்தாலும் பல நேரம் அந்த presentation + charismaவை ரசித்தே இருந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு வருகிற அழுத்தங்களையும் சமாளித்து சொன்னபடியே விட்ட பஞ்ச் வசனங்களை நடத்தியும் காட்டி 'முதல்வன்' படத்தை நிஜத்தில் நடத்திக் காண்பித்திருக்கிறார்.
(முதல்வன் படக்கதை தனக்கு அப்போது வேண்டாம் என்று நிராகரித்தும் இருந்தார் விஜய்)அவரது திரை வளர்ச்சியும் வெற்றியும் போலவே கடைசி சில ஆண்டுகளின் கட்டமைப்புக்களும் நேர்த்தியான திரைக்கதை தான்.
இதெல்லாம் காகம் இருந்து பனம் பழம் விழுந்த கதை அல்ல.கண்முன்னே நிகழ்ந்த ஓர் அரசியல் அற்புதம்.
மிகப்பெரிய முயற்சியும் முதலீடும் இதன் பின்னால் இருந்ததோடு வலி தாங்கி, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உழைப்பை வழங்கக்கூடிய திடமும் அதற்கேற்ற அணியும் இருந்திருக்கவேண்டும்.
விஜய், தவெகவின் கொள்கைகள், கட்டுப்பாடில்லாத அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், வெறியர்கள், அவர்களது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன தான்.
ஆனால் இந்த வெற்றியும் அதற்கான scheming + strategies & இன்றைய வெற்றியின் சாதனைகள் ஆகியன மெச்சிப் பாராட்டவும், முடிந்தால் பின்பற்றவும் படவேண்டியவை.
ரசிகர்களுக்கான தளபதியாக இருந்து இனி மக்களுக்கான (தனக்கு வாக்களிக்காத 3 கோடி பேருக்கும் சேர்த்தே) தலைவனாக புது வழி காட்டுவதற்கும் சேர்த்து மனமார்ந்த வாழ்த்துகள் விஜய்.
பெரிய சவாலைக் கடந்த உங்களுக்கு இனி 118ஐ அடைவதும் அதற்குப் பின் உங்கள் ரசிகர்களை உங்கள் மக்கள் சேவைக்கும் உங்கள் அன்றாடப் பயணங்களுக்கும் மக்களைச் சந்திக்கும்போதும் பழக்கப்படுத்தி ஒழுக்கப்படுத்துவதும் தான் அதை விடப் பெருஞ்சவாலாக அமையப்போகிறது (இன்றும் அவரது வாகனத்துக்கு முன்னால் வந்து குதித்து வீழ்ந்து அன்பைக் காட்ட முற்பட்டோர் தந்த சங்கடத்தை முகத்தில் காட்டாமல் மறைத்த விஜயைப் பார்க்க பாவமாக இருந்தது) என்பது தெளிவு.
எவ்வளவோ பண்ணிட்டீங்க...
நல்லதே நடக்கட்டும் 🙏🏻👏

Sunday, May 3, 2026

இணையத்தைச் சூடாக்கிய அந்த “ஆணுறை ( Condom) விளம்பரம்”

 இணையத்தைச் சூடாக்கிய அந்த “ஆணுறை (Condom) விளம்பரம்”

சில விளம்பரங்கள் பொருளை விற்கும்.
சில விளம்பரங்கள் கருத்தை விற்கும்.
சில விளம்பரங்கள் — நம்மைச் சிரிக்கவைத்து, அதே நேரத்தில் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.

அப்படி இணையத்தில் திடீரென தீப்பிடித்துப் பரவிய ஒன்று, பிரேசிலிய ஆணுறை விளம்பரம் எனச் சொல்லப்படும் ஒரு படைப்பு.



அக்காட்சியில் உலகத் தலைவர்கள் சிலர், ஒரு ஆணுறைக்குள் சிக்கிக்கொண்டு போராடுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதனுடன் வந்த வாசகம் இன்னும் கூர்மையானது:

‘Some People Should Never Have Been Born'

“சிலர் பிறந்திருக்கவே கூடாது.”

சொல்லப்போனால், இது ஒரு சாதாரண விளம்பர வாசகம் அல்ல.
இது நேராக நெற்றியில் ஒட்டப்படும் அரசியல் நையாண்டி.

ஆனால் இதில் ஒரு திருப்பம் இருக்கிறது.

இது உண்மையில் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விளம்பரம் அல்ல. Platinum FMD நிறுவனத்தில் இருந்த ஒருவரின் சலிப்பு நேரப் படைப்பாகவே இது உருவானதாகச் சொல்லப்படுகிறது. சில உலகத் தலைவர்களை நையாண்டி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கற்பனை விளம்பரம், அப்படியே உலக சந்தையில் ஓடிய விளம்பரம் அல்ல.

ஆனால் இணையம் எப்போது உண்மை, கற்பனை, நையாண்டி, கோபம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிறதோ, அப்போது அதற்கே தனி உயிர் வந்து விடும்.

அப்படித்தான் இது நடந்தது.

Facebook-இல் உள்ள “We Resist” என்ற பக்கம் இதை பகிர்ந்ததும், படம் தீப்பற்றியது. மக்கள் சிரித்தார்கள். சிலர் கைதட்டினார்கள். சிலர் சினந்தார்கள். சிலர் “இதை உண்மையிலேயே ஒளிபரப்பியிருக்கலாமே!” என்றார்கள்.

நாம் பார்க்காத விளம்பரமே, பார்த்த விளம்பரங்களை விட அதிகம் பேசப்பட்டது. அதுதான் இணையத்தின் புதுக்கால விளம்பரத் தத்துவம்.

இன்னும் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த விளம்பரம் ஒரு பொருளை விற்கவில்லை. அது ஒரு மனநிலையை விற்றது.
“அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?” என்ற கேள்விக்கு, ஒரு குத்துச்சிரிப்பான பதில் கொடுத்தது.

நையாண்டி எப்போதும் நாகரிகமாக இருக்க வேண்டுமா?
அல்லது அது குத்திக் கிழிக்க வேண்டுமா?

அந்த விவாதம் வேறு.

ஆனால் ஒரு விஷயம் உறுதி:
இப்படி ஒரு விளம்பரம் உண்மையில் தொலைக்காட்சியில் வந்திருந்தால், prime time செய்திகளிலும், அரசியல் விவாதங்களிலும், social media போர்களிலும் பல நாட்கள் வாழ்ந்திருக்கும்.

சில விளம்பரங்கள் ஒளிபரப்பப்படாமலேயே புகழ்பெறும்.
சில கருத்துகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலேயே மக்களின் மனதில் ஒலிக்கும்.

இந்த “condom விளம்பரம்” அதில் ஒன்று.

அதன் வாசகம் கடுமையானது.
அதன் நகைச்சுவை கறுப்பாக (Dark Humour) இருந்தது.
அதன் அரசியல் நையாண்டி கூர்மையாக இருந்தது.

ஆனால் இணையம் அதை விரும்பியது.

ஏனெனில், சில நேரங்களில் மக்கள் விளம்பரத்தைப் பார்க்க விரும்புவதில்லை;
அவர்கள் தங்களின் கோபத்தை யாராவது புத்திசாலித்தனமாக வடிவமைத்துக் காட்டினால் போதும்.

அதுதான் இங்கே நடந்தது.

உண்மையான விளம்பரம் அல்ல.
ஆனால் உண்மையான எதிர்வினையை பெற்ற நையாண்டி.

இணையக் காலத்தில் அதுவே சில நேரங்களில் போதும்.

அதுசரி, இதே விளம்பரங்களில் இன்னும் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டியவர்கள் இன்னும் யார் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 🫣😉

Monday, April 27, 2026

இன்னும் ??

 வலைப்பதிவு, வலைப்பூ, வலையுலகம் என்று கோலாகலமாகக் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக் காலம் நினைவிருக்கா?

இன்னும் இந்தப் பக்கம் போன்ற பதிவுகளை வாசிக்கும் நண்பர்கள் இருக்கிறீர்களா?

Wednesday, April 15, 2026

நீளிரா...

 நீளிரா



இயக்குனர் சோமி, தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் வெளிப்படையான உரையாடல் காணொளியொன்றை இன்று YouTube, Facebook இரண்டிலும் பதிவேற்றவுள்ளேன்.
படம் பார்த்த பிறகு மனதில் எழுந்த உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, இருந்த கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதற்கு முதல்...
இலங்கையின் வடபுல மொழி வழக்கை இதுவரை காலம் வந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறது நீளிரா.
இதுவரை கோலிவூட்டில் எந்தவொரு படைப்பாளியும் தொட்டிராத, இந்திய தணிக்கையினால் வெட்டுக்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இரு பக்க கூர்வாள் போன்ற ஒரு கதையை பாதிக்கப்பட்ட பக்கம் நின்று அறவழி பேசியிருக்கிறார் சோமிதரன்.
சிறுவயது முதலே எம் இனம் குறித்து ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு மாணவனாகவும் பின்னாளில் தேடல் கொண்ட இளம் ஊடகர், ஆவணப் படைப்பாளியாகக் கண்டிருந்த சோமிதரனின் உழைப்பும் நேர்த்தியும் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் திரைப்படமாக வரும் நேரம் இருக்கும் கட்டுப்பாடுகள், நடைமுறைகளின் படி சோமி நினைத்த கதையை இயல்பாகத் தரமுடியுமா என்பது தான் Trailer பார்த்த பிறகும் எனக்கான கேள்வியாக இருந்தது.
எனினும் போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையின் அனுபவப்பகிர்வு - 1988இல் IPKF என்ற பெயரில் அமைதிக்காக இலங்கைக்கு வந்து பின் எம் வாழ்வில் இதுவரை காலம் நாம் கண்ட சொல்லொணாக் கொடுமைகளைத் தந்த இந்தியப் படைகளின் அட்டூழியத்தின் சாட்சியங்களின் ஓரிரவை இயல்பு மீறாமல் பதிவிட்டிருக்கிறார் திரைப்படமாக.
களம், காட்சியமைப்பு, பாத்திரங்கள், எம் தமிழ்ப் பேச்சு வழக்கு, வலிகளை உணர்த்தும் வசனங்கள் + முகபாவங்கள் என்று மினக்கெட்டு செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சோமி.



இந்த நீளமான ஓரிரவு (நீள் + இரா - என்னவொரு அழகான கவித்துவமான தலைப்பு) ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மூலம் அந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை பல கொடுமைகளை சில வசனங்கள் மூலமாகவும் காட்டிவிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கு நாம் கண்ட, கேட்ட சம்பவங்களை நினைவுகள் மூலமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதில் வரும் வயதான தாத்தா பாத்திரம் (அதிகம் விவரித்தால் கதையைச் சொல்லிவிடுவேன்) சம்ஸ்கிருத/தமிழ் பண்டிதராக இருந்த என் பாட்டா(அப்பாவின் அப்பா)வை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தது.
IPKF டாங்கிகள் சகிதம், பலாலியிலிருந்து அடித்த ஷெல்களுடன் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த நேரத்தில் நாம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அகதிகளாக செல்ல முடிவெடுத்தபோது தனக்கு சம்ஸ்கிருதம் தெரியும் தன்னைச் சுடமாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து நின்றவரைக் காலில் சுட்டுவிட்டுத் தான் போனார்கள் 'அமைதி' காக்கும் படையினர்.
இதுபோன்ற பல சம்பவங்களை அழுத்தமான வசனங்களும் ஏன் சிறு சிறு காட்சியின் உருவகங்களும் காண்பிக்கின்றன.
(விளையாட்டு) துப்பாக்கி இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தாயிடம் கேட்கும் சிறுவன்
முதலில் இந்த வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரப் பாருங்கோ என்னும் அம்மா
உலகில் எந்தப் போர் அமைதிக்காக நடந்திருக்கிறது என்று கேட்கும் பெரியவர் (மனிதாபிமான யுத்தம் செய்த ஶ்ரீ லங்கா இராணுவம் உள்ள நாடல்லவா நம் நாடு)எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்
எங்கள் கண்முன்னே அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் பாத்திரங்களாகவும் நாம் உணர்ந்த, அனுபவித்த மற்றும் கேட்டறிந்த சம்பவங்களை அந்த ஓரிரவின் நீட்சியில் உணர்த்துவதும் யாழ் வைத்தியசாலை படுகொலைகள், கொக்குவிலில் இவர்கள் நிகழ்த்திய படுபாதகங்களை உரையாடல்கள் வழியாகக் கொண்டுவருவதும் சோமியின் திறமை.
அந்தக் காலகட்டத்தில் நடந்த அத்தனையையும் கொண்டுவர இது ஒன்றும் போரியல் படமோ அல்லது சோமியின் முன்னைய ஆவணப் படங்கள் போன்றதோ அல்ல..
அன்றைய நாளில் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் /ஓரிரவு வாழ்க்கை !
அத்தனை நெருக்கடி மத்தியிலும் வயிற்றில் நெருப்பையும் கையில் எந்நேரமும் அடையாள அட்டையையும் வைத்துக்கொண்டும் கூட தமக்கேயுரிய மகிழ்ச்சியான பொழுதுகள், பாசம், காதல், இலட்சியம் என்று வாழ்ந்த எம் இனம் பற்றிய ஒரு முக்கியமான பதிவு.
சோமியிடம் நான் சொன்னேன் - சம்பவத்தின் கோர்வைகளாக ஒரு தரமான சிறுகதையை நல்ல படமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று.
இதன் சிறப்பே இயல்பு மாறாமை. இதற்கு சோமிதரனுக்கு உறுதுணையாக இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் குழுவும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
குறைகள் சொல்ல முடியாத, எம் படைப்பாளிகளுக்கும் எம் கதையை எதுவித சமரசமும் செய்துகொள்ளாமல் அதேவேளையில் வர்த்தக சினிமாவாகக் கொண்டுவரப்போகும் படைப்பாளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய நீளிராவின் வெற்றியை உறுதிப்படுத்த எம்மாலான பங்களிப்பை வழங்கவேண்டியது எம் கடமை.
படம் : Sujeewa Kumar

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !