View My Stats

Wednesday, April 15, 2026

நீளிரா...

 நீளிரா



இயக்குனர் சோமி, தயாரிப்பாளரான பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் வெளிப்படையான உரையாடல் காணொளியொன்றை இன்று YouTube, Facebook இரண்டிலும் பதிவேற்றவுள்ளேன்.
படம் பார்த்த பிறகு மனதில் எழுந்த உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதோடு, இருந்த கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதற்கு முதல்...
இலங்கையின் வடபுல மொழி வழக்கை இதுவரை காலம் வந்த தென்னிந்தியத் திரைப்படங்களில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறது நீளிரா.
இதுவரை கோலிவூட்டில் எந்தவொரு படைப்பாளியும் தொட்டிராத, இந்திய தணிக்கையினால் வெட்டுக்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஒரு விடயத்தை இரு பக்க கூர்வாள் போன்ற ஒரு கதையை பாதிக்கப்பட்ட பக்கம் நின்று அறவழி பேசியிருக்கிறார் சோமிதரன்.
சிறுவயது முதலே எம் இனம் குறித்து ஆர்வமும் உணர்வும் கொண்ட ஒரு மாணவனாகவும் பின்னாளில் தேடல் கொண்ட இளம் ஊடகர், ஆவணப் படைப்பாளியாகக் கண்டிருந்த சோமிதரனின் உழைப்பும் நேர்த்தியும் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் திரைப்படமாக வரும் நேரம் இருக்கும் கட்டுப்பாடுகள், நடைமுறைகளின் படி சோமி நினைத்த கதையை இயல்பாகத் தரமுடியுமா என்பது தான் Trailer பார்த்த பிறகும் எனக்கான கேள்வியாக இருந்தது.
எனினும் போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையின் அனுபவப்பகிர்வு - 1988இல் IPKF என்ற பெயரில் அமைதிக்காக இலங்கைக்கு வந்து பின் எம் வாழ்வில் இதுவரை காலம் நாம் கண்ட சொல்லொணாக் கொடுமைகளைத் தந்த இந்தியப் படைகளின் அட்டூழியத்தின் சாட்சியங்களின் ஓரிரவை இயல்பு மீறாமல் பதிவிட்டிருக்கிறார் திரைப்படமாக.
களம், காட்சியமைப்பு, பாத்திரங்கள், எம் தமிழ்ப் பேச்சு வழக்கு, வலிகளை உணர்த்தும் வசனங்கள் + முகபாவங்கள் என்று மினக்கெட்டு செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சோமி.



இந்த நீளமான ஓரிரவு (நீள் + இரா - என்னவொரு அழகான கவித்துவமான தலைப்பு) ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மூலம் அந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை பல கொடுமைகளை சில வசனங்கள் மூலமாகவும் காட்டிவிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கு நாம் கண்ட, கேட்ட சம்பவங்களை நினைவுகள் மூலமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதில் வரும் வயதான தாத்தா பாத்திரம் (அதிகம் விவரித்தால் கதையைச் சொல்லிவிடுவேன்) சம்ஸ்கிருத/தமிழ் பண்டிதராக இருந்த என் பாட்டா(அப்பாவின் அப்பா)வை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தது.
IPKF டாங்கிகள் சகிதம், பலாலியிலிருந்து அடித்த ஷெல்களுடன் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த நேரத்தில் நாம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அகதிகளாக செல்ல முடிவெடுத்தபோது தனக்கு சம்ஸ்கிருதம் தெரியும் தன்னைச் சுடமாட்டார்கள் என்று பிடிவாதம் பிடித்து நின்றவரைக் காலில் சுட்டுவிட்டுத் தான் போனார்கள் 'அமைதி' காக்கும் படையினர்.
இதுபோன்ற பல சம்பவங்களை அழுத்தமான வசனங்களும் ஏன் சிறு சிறு காட்சியின் உருவகங்களும் காண்பிக்கின்றன.
(விளையாட்டு) துப்பாக்கி இல்லாமல் எப்படி விளையாடுவது என்று தாயிடம் கேட்கும் சிறுவன்
முதலில் இந்த வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரப் பாருங்கோ என்னும் அம்மா
உலகில் எந்தப் போர் அமைதிக்காக நடந்திருக்கிறது என்று கேட்கும் பெரியவர் (மனிதாபிமான யுத்தம் செய்த ஶ்ரீ லங்கா இராணுவம் உள்ள நாடல்லவா நம் நாடு)எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்
எங்கள் கண்முன்னே அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரைப் பாத்திரங்களாகவும் நாம் உணர்ந்த, அனுபவித்த மற்றும் கேட்டறிந்த சம்பவங்களை அந்த ஓரிரவின் நீட்சியில் உணர்த்துவதும் யாழ் வைத்தியசாலை படுகொலைகள், கொக்குவிலில் இவர்கள் நிகழ்த்திய படுபாதகங்களை உரையாடல்கள் வழியாகக் கொண்டுவருவதும் சோமியின் திறமை.
அந்தக் காலகட்டத்தில் நடந்த அத்தனையையும் கொண்டுவர இது ஒன்றும் போரியல் படமோ அல்லது சோமியின் முன்னைய ஆவணப் படங்கள் போன்றதோ அல்ல..
அன்றைய நாளில் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் /ஓரிரவு வாழ்க்கை !
அத்தனை நெருக்கடி மத்தியிலும் வயிற்றில் நெருப்பையும் கையில் எந்நேரமும் அடையாள அட்டையையும் வைத்துக்கொண்டும் கூட தமக்கேயுரிய மகிழ்ச்சியான பொழுதுகள், பாசம், காதல், இலட்சியம் என்று வாழ்ந்த எம் இனம் பற்றிய ஒரு முக்கியமான பதிவு.
சோமியிடம் நான் சொன்னேன் - சம்பவத்தின் கோர்வைகளாக ஒரு தரமான சிறுகதையை நல்ல படமாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று.
இதன் சிறப்பே இயல்பு மாறாமை. இதற்கு சோமிதரனுக்கு உறுதுணையாக இசையும் ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் குழுவும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
குறைகள் சொல்ல முடியாத, எம் படைப்பாளிகளுக்கும் எம் கதையை எதுவித சமரசமும் செய்துகொள்ளாமல் அதேவேளையில் வர்த்தக சினிமாவாகக் கொண்டுவரப்போகும் படைப்பாளிகளுக்கும் நம்பிக்கை தரக்கூடிய நீளிராவின் வெற்றியை உறுதிப்படுத்த எம்மாலான பங்களிப்பை வழங்கவேண்டியது எம் கடமை.
படம் : Sujeewa Kumar

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !

Thursday, March 30, 2017

நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai


வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இல்லை..
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை
நல்லை என்றவுடன் நல்லூர் எவ்வளவு ஞாபகம் வருகிறதோ, அல்லை என்றவுடன் யுத்தகாலத்தில் அடிக்கடி கேட்ட, வாசித்த அல்லைப்பிட்டியும் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், //நன்னிலவே நீ நல்லை இல்லை// என்று நீ நல்ல நிலவு தான் ஆனாலும் நல்லவள் இல்லை என்று வர்ணிக்கும் தமிழின் செறிவும் துணிவும் ரசனையின் உச்சம்.

நல்லை அல்லை.. மீண்டும் மீண்டும் ரசிக்க ரசிக்க ....
என்றோ படித்த திருநாவுக்கரசரின் திருவொற்றியூர் திருத்தாண்டகம் ஞாபகம் வந்தது.
தற்போது மிக அரிதாக (அல்லது அறவே இல்லாத)அறு சீரடி, எண் சீரடியில் சந்தச்சுவை, தமிழின் இனிமை உணர்த்தும் தாண்டக வகைச் செய்யுள்களின் அருமையையும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய 'காற்று வெளியிடை'க்கும் வைரமுத்துவுக்கும் நன்றி..
திருஒற்றியூர் - திருத்தாண்டகம்
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

(மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.)
உரை - எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.

இதே நல்லை அல்லை சொல்லாடல் குறுந்தொகையிலும் கையாளப்படுள்ளதை வாசித்தறிந்தேன்..

“நல்லை அல்லை” சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று. நெடுவெண்ணிலவினார் என்ற பெயரில் உள்ள கவிஞரால் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கவிதை, தோழிக் கூற்றாக அமைந்தது.
“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்பது குறுந்தொகை 47வது பாடல்.
“நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே! கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.” இதுவே அப்பாடலின் பொருள்.

Friday, April 29, 2016

தேவதையா சூனியக்காரியா? முடிவெடுங்கள்...


நண்பர் ஒருவர் பகிர்ந்த கதையை இன்றைய வெள்ளி சூரிய ராகங்களில் பகிர்ந்துகொண்டேன்.

ஒரு பெண் இளவரசியாவதும் சூனியக்காரி ஆகுவதும் உங்கள் கரங்களில் தான்..
எப்படி?
கேட்டுப் பாருங்கள்..

முன்னைய சூரிய ராகங்கள் நிகழ்ச்சியின் பகுதிகளும் எனது யூடியூப் வீடியோக்களாகப் பகிரப்பட்டுள்ளன.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, March 16, 2016

நாக்பூரில் நியூ சீலாந்து சுழல் சுனாமியில் சிக்கிய இந்தியா - தெறித்து விழுந்த மீம்கள்

இந்தியா 79க்கு சுருண்டு போய் நியூ சீலாந்துக்கு எதிராகத் தோற்ற நிமிடத்திலிருந்து உலகின் பல்வேறு கிரிக்கெட் மூலைகளிலிருந்தும் கொட்டித் தெறித்து விழுந்து வரும் மீம்கள்.

ஒரு தோல்வியினால் இத்தனை நகைச்சுவைகளை உருவாக்க முடியுமென்றால் இன்னும் பல தோல்விகளைப் பார்த்து ரசிக்கலாமே ;)

நிச்சயமாக இவற்றைப் பார்த்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகப் போவது உறுதி...

உருவாக்கியவர்களின் படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள்.
எங்கே இருந்து தான் சிந்திக்கிறார்களோ? எல்லாம் வேற வேற லெவல்.

இவற்றில் இல்லாத, நீங்கள் கண்டு ரசித்த வேறு மீம்கள் இருந்தால் பின்னூட்டங்களாக அனுப்பி வையுங்கள்..
சேர்ந்து சிரிப்போம் :)