Showing posts with label A.R.ரஹ்மான். Show all posts
Showing posts with label A.R.ரஹ்மான். Show all posts

Thursday, March 30, 2017

நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai


வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இல்லை..
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை
நல்லை என்றவுடன் நல்லூர் எவ்வளவு ஞாபகம் வருகிறதோ, அல்லை என்றவுடன் யுத்தகாலத்தில் அடிக்கடி கேட்ட, வாசித்த அல்லைப்பிட்டியும் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், //நன்னிலவே நீ நல்லை இல்லை// என்று நீ நல்ல நிலவு தான் ஆனாலும் நல்லவள் இல்லை என்று வர்ணிக்கும் தமிழின் செறிவும் துணிவும் ரசனையின் உச்சம்.

நல்லை அல்லை.. மீண்டும் மீண்டும் ரசிக்க ரசிக்க ....
என்றோ படித்த திருநாவுக்கரசரின் திருவொற்றியூர் திருத்தாண்டகம் ஞாபகம் வந்தது.
தற்போது மிக அரிதாக (அல்லது அறவே இல்லாத)அறு சீரடி, எண் சீரடியில் சந்தச்சுவை, தமிழின் இனிமை உணர்த்தும் தாண்டக வகைச் செய்யுள்களின் அருமையையும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய 'காற்று வெளியிடை'க்கும் வைரமுத்துவுக்கும் நன்றி..
திருஒற்றியூர் - திருத்தாண்டகம்
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

(மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.)
உரை - எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.

இதே நல்லை அல்லை சொல்லாடல் குறுந்தொகையிலும் கையாளப்படுள்ளதை வாசித்தறிந்தேன்..

“நல்லை அல்லை” சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று. நெடுவெண்ணிலவினார் என்ற பெயரில் உள்ள கவிஞரால் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கவிதை, தோழிக் கூற்றாக அமைந்தது.
“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்பது குறுந்தொகை 47வது பாடல்.
“நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே! கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.” இதுவே அப்பாடலின் பொருள்.

Monday, June 21, 2010

நான் வருவேன் - ராவணன்

நான் வருவேன் - ராவணன் 






வைரமுத்து எழுதி A.R.ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடல்..
படத்தின் இறுதியில் வந்து உயிர் உருக்கும் பாடல்..

பலர் இதை மணிரத்னம் எழுதியதாக சொன்னாலும் அது தவறு.
உரையாடலைக் கவனியுங்கள்..
'வீரா' பாடல் மட்டுமே வைரமுத்து எழுதாதது..

வைரமுத்துவின் குரலில் கவிதையை ரசியுங்கள்.. பின்னர் பாடலின் இனிமையை ரசியுங்கள்.


யாராவது முழுமையாகப் பாடலைத் தரவேற்றினால் சுட்டியை அனுப்பி வையுங்கள்.. 












நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..


பிற்சேர்க்கை...

இசைப்புயல் A.R.ரஹ்மான் முதல் தடவையாகத் தோன்றியுள்ள பாடல் காட்சியாக ரசிகர்கள் மனதை மீண்டும் தொட்டுள்ளது 'நான் வருவேன்'....
படத்தில் வந்த இந்தப் பாடலை விட இசைப்புயல் தோன்றியுள்ள, அவரோடு ஐஸ்வர்யாவும் தோன்றியுள்ள இந்தக் காணொளி அதிகம் ஈர்ப்பு.....