Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, March 30, 2017

நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai


வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இல்லை..
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை
நல்லை என்றவுடன் நல்லூர் எவ்வளவு ஞாபகம் வருகிறதோ, அல்லை என்றவுடன் யுத்தகாலத்தில் அடிக்கடி கேட்ட, வாசித்த அல்லைப்பிட்டியும் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், //நன்னிலவே நீ நல்லை இல்லை// என்று நீ நல்ல நிலவு தான் ஆனாலும் நல்லவள் இல்லை என்று வர்ணிக்கும் தமிழின் செறிவும் துணிவும் ரசனையின் உச்சம்.

நல்லை அல்லை.. மீண்டும் மீண்டும் ரசிக்க ரசிக்க ....
என்றோ படித்த திருநாவுக்கரசரின் திருவொற்றியூர் திருத்தாண்டகம் ஞாபகம் வந்தது.
தற்போது மிக அரிதாக (அல்லது அறவே இல்லாத)அறு சீரடி, எண் சீரடியில் சந்தச்சுவை, தமிழின் இனிமை உணர்த்தும் தாண்டக வகைச் செய்யுள்களின் அருமையையும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய 'காற்று வெளியிடை'க்கும் வைரமுத்துவுக்கும் நன்றி..
திருஒற்றியூர் - திருத்தாண்டகம்
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

(மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.)
உரை - எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.

இதே நல்லை அல்லை சொல்லாடல் குறுந்தொகையிலும் கையாளப்படுள்ளதை வாசித்தறிந்தேன்..

“நல்லை அல்லை” சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று. நெடுவெண்ணிலவினார் என்ற பெயரில் உள்ள கவிஞரால் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கவிதை, தோழிக் கூற்றாக அமைந்தது.
“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்பது குறுந்தொகை 47வது பாடல்.
“நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே! கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.” இதுவே அப்பாடலின் பொருள்.

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin