Wednesday, March 26, 2014

ஒரு சுடர் இரு சுடர் - ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே



அஜித் - விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தாண்டி வேறெந்த முக்கியத்துவமோ வரலாறோ இல்லாத படம்.

ஆனால் முத்து முத்தான பாடல்கள்.
முக்கியமாக மூன்று பாடல்கள்.

இளையராஜாவின் மும்முரமான பணிகளில் அருண்மொழி இசைப் பணிகளை மேற்பார்வை பார்த்து, பின்னணி இசையும் வழங்கிய படம்.
(கானா பிரபா அண்ணரின் வானொலிப் பேட்டியில் அருண்மொழியே சொல்லியிருந்தார்)

இந்தப்படத்தில் எப்போதும் எனக்குப் பிடித்த அருண்மொழி பாடிய அம்மா பாடல் "அம்மன் கோவில் எல்லாமே" எப்போதுமே மனதுக்கு மிக நெருக்கமானது..

இன்னொரு அருண்மொழி பாடிய பாடல், இவள் யாரோ வான் விட்டு என்று ஆரம்பிக்கும் பாடல்.. (இன்னொரு நாள் பொற்காலப் புதனுக்காக வைத்துள்ளேன்)

இன்னொரு பாடல் இன்று காலையில் ஒலிபரப்பியிருந்தேன்.

ராஜாவின் பார்வையிலே - ஒரு சுடர் இரு சுடர்...

சூரியன் இசைக் களஞ்சியத்தில் காணாமல் போயிருந்த பாடலைத் தேடியெடுத்து ஒலிபரப்பும் வாய்ப்பு பொற்காலப் புதன் மூலம் கிடைத்திருந்தது.

மனோ, ஜானகியுடன் கோரஸ் பாடியுள்ளோரின் குரலிசையும் இனிய அனுபவம் தரக்கூடியது.

இளையராஜா டச்சைத் தாண்டி ஸ்பெஷலாக இந்தப் பாடலில் அருண்மொழி துருத்தித் தெரிகிறாரோ என்று ஒரு ஐயம்.
(பாடலின் இசை மேற்பார்வையும் இசைக் கோர்ப்பும் அருண்மொழி தானா ? அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நாட்டுப்புறப் பாட்டு படத்திலும் உள்ள பாடல்களைக் கேட்கும்போதும் இதே உணர்வு. அந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பும் நம்ம அருண்மொழி தான்)

பாடலின் ஜாதி போடும் இசைக்கோலம், வரிகளின் ஜாலம், அதுபோல மனோ சிற்பியின் வருகையின் பின்னர் மாறிய குரலோடு இல்லாமல், அதற்கு முன் பாடிய தன் இயல்பான குரலில் காதல் வழிந்தோடும் குரலில் பாடியிருப்பது சுகம்.
ஜானகி அம்மையார் குழைகிற இடங்களும் ரசனையுடன் இன்னொரு இசைக் கருவி மீட்டுவது போலவே இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட இந்தப் பாடலில் முக்கிய பாடக, பாடகியரை விட கோரஸ் பாடகியர்க்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
பாடலின் ஆரம்பத்தில் ஜானகி பாட முதலே கோரஸ் குரல்கள் பாடலை நகர்த்திச் செல்லும் நயமும், பாடல் முழுவதும் கோரஸ் ஒலிகள் பாடலுக்கு தனி வர்ணம் கொடுப்பதும் புதுமை.

அவதாரம் படத்தில் இதே மாதிரி தென்றல் வந்து தீண்டும் போது பாடலில் இசைஞானி விளையாடி இருப்பார்.
எஜமான் பட - ஒரு நாளும் உன்னை மறவாத, ஆலைப்போல் வேலைப் போல்
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள்வந்தால் ராஜகுமாரி பாடல்கள் உடனே ஞாபகம் வந்த மேலும் சில உதாரணங்கள்.

கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்...

அட பாருங்கள் என்னும்போது தான் விஜய் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது.
காதல் படங்களைத் தேர்ந்து நடிக்கும் காலத்தில் (பூவே உனக்காக, லவ் டுடே) இவருக்கான அடையாளமாக இருந்த அந்த அசைவும், நளினமான நடனமும் இந்தப் பாடலிலும் பாருங்கள்.

இந்திரஜா, இவர் தான் பின்னர் மின்சாரக் கண்ணாவிலும் விஜய்யோடு ஜோடி சேர்ந்தவர்.



ரசனையான இந்தப்பாடலை இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு பாடலும் ஞாபகம் வர, அந்தப் பாடலின் ஆரம்ப இசையை ஒரு சில வினாடிகள் ஒலிபரப்பிக் காட்டியிருந்தேன்...



இரண்டுமே இசைஞானியின் இசை தான்..
மலைக்கோவில் ரஜினியால் பிரபலமாகிப் போனது.

ஆனால் இரண்டு பாடல்களுமே கேட்க கேட்க சுகம் தான்.

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin