சகத்திர ஆண்டு - 2000 (எழில் அண்ணாவால் அறிமுகமான வார்த்தை) பிறக்கும் காலகட்டத்தில் வைரமுத்துவின் இந்தப் பாடல் தான் என் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடிக்கும்.
ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு
பிறந்த புதிய நூற்றாண்டுக்காக அப்போது 'சக்தி'யில் நான் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலின் பல வரிகளை சிலாகித்து இயற்கையிடம் மனிதத்தின் வேண்டுகோள்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.
13,14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு தடவை இந்தப் பாடலை எனது 'சூரிய ராகங்கள்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய நேரமும் இந்தப் பாடல் அதே போல புதிதாக, அதே இனிமையும் , பாடலின் 'இளமையும்' 'புதுமையும்' மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.
ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து பிறகு
அதே போல, வைரமுத்து புதிய நூற்றாண்டிடம் வேண்டிய வேண்டுகோள்கள் 'எல்லாமே' இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கின்றன.
பாடலின் எல்லா வரிகளும் ரசனையுடையவையாக ஆழமாக உணர்ந்து மனதோடு இயைந்த சில வரிகளை அன்று கத்தரித்து ஒலிபரப்பியதும், இன்றும் ஞாபகம் வைத்திருப்பதும் கவிஞரின் வெற்றியாக இருந்தாலும், பாடகர் நவீன், உதித் நாராயணன் பாணித் தமிழ் உச்சரிப்பில் பாடலின் ஜீவனை சிதைத்திருக்கிறார் என்பது கொடுமையிலும் கொடுமை.
தண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...
பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.
எனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.
கவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.
மனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
இந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
எங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால் சாத்தியமில்லைத் தான்.
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
இப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
இந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.
வைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.
நாம் வரும் வாடகை வீடான பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.
ஆனால் யாரிடம் கேட்பது?
படம்: முகவரி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: தேவா
பாடியவர்: நவீன்
ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு
வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா
இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
சாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா
புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு
ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து பிறகு
"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு"
என்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.
அண்ணா நல்ல பதிவு.
ReplyDelete//பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.//
நீங்கள் தந்திருக்கும் வரிகளிலும் சில மாற்றங்கள் உண்டு. நீங்களும் இணையத்தில் காணப்படும் வரிகளின் லகர ளகர மாற்றங்களையே திருத்தியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
சமகால நடிகர்களில் அஜித்துக்கு பாடல்வரிகளுக்கு வாயசைப்பதில் திறமையானவர் என்ற ஓர் பெயரும் உண்டு. முணுமுணுக்காமல் வாயை நன்றாக திறந்து லிப்ஸ் மூவ்மென்ட் கொடுப்பதை இன்று வரை அவரது பாடல்களில் காணலாம்.
அதில் இருந்தும் பாடலில் வரும் பின்னணிக் காட்சிகளைக்கொண்டும் என் மனதில் படும் சில திருத்தங்கள்.
//வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு//
வையகம் வாழவிடு எங்கள் வாசலில் கோலமிடு
//வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா//
வெப்பம் இல்லாமல் சுக வெளிச்சம் நீ தரவா
**அடுத்த வரியில் வெள்ளம் இல்லாமல் மழை கேட்கும் கவிஞர் வெய்யில் கொடுமையை நினத்து சுக வெளிச்சம் கேட்டிருக்கலாம்.
//ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு//
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உழைக்கின்ற வலிமை கொடு
**பாடலில் இரன்டு முறை வரும் இந்த வரியில் அஜித் கையை பொத்தி மேலே தூக்குகின்றார். அது உழைக்கின்ற வலிமை கொடு என்றே எனக்கு விளங்குகின்றது.
//பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா//
பொற்தாரில் வாகனம் ஓடும் பொற்காலங்கள் தருவாயா
//ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா//
ஒரே நிழல் ஒரே விசா நீ கொண்டு வா நீ கொண்டு வா
**பாடலில் பல்வேறு நாடுகளின் கொடிகள் பிண்ணனியில் வரும்
//ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா//
ஒரே பகல் ஒரே விலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
//போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு//
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்செடி நட்டுவிடு
நன்றி.